வேதாந்தக் குறிப்புகள் — குருமுகமாகக் கேட்டறிந்தவை

 

गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः । गुरुः साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥

guru-r-brahmā guru-r-viṣṇuḥ guru-r-devo maheśvaraḥ, guruḥ sākṣāt paraṁ brahma tasmai śrī-gurave namaḥ.

குரு பிரம்மா; குரு விஷ்ணு; குரு தேவனாகிய மகேஸ்வரன்; குருவே சாட்சாத் பரப்பிரம்மம்; அத்தகைய குருவுக்கு நமஸ்காரம்.

ஸ்ரீ சங்கரானந்தா
ஸ்ரீ சங்கரானந்தா

இக்கட்டுரையை எனது குரு ஸ்ரீ சங்கரானந்தா அவர்களின் திருவடிகளில் சமர்ப்பணம் செய்கிறேன்.


இவை ஒரு சொற்களஞ்சியம் அல்ல — எனது சொந்தக் குறிப்புகள். தத்வமஸி, மஹாவாக்கியம் உள்ளிட்ட பல வகுப்புகளில் நேரடியாகக் கலந்துகொண்டு, குருமுகமாகக் கேட்டு, அப்போதே எடுத்து வைத்திருந்த குறிப்புகள் இவை. இவை அகராதி அர்த்தங்கள் அல்ல — வகுப்பில் விளக்கப்பட்டபடி, உதாரணங்களுடன் நான் புரிந்துகொண்ட வடிவில் பதிவு செய்யப்பட்டவை. வகுப்பறையின் சூழலிலிருந்து பிரிக்கும்போது சில நுணுக்கங்கள் தட்டுப்படாமல் போகலாம் என்பதை மனதில் கொண்டு படிக்கவும். இந்தச் சமூகத்துடன் பகிர்ந்துகொள்ள விரும்பி இதைப் பதிவிடுகிறேன்; நான் இந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்துவேன்.

  • “நீ கொண்டுவந்ததை நீ அனுபவிப்பாய்” என்று உறுதியுடன் அந்த ஈஸ்வர சக்தியை நம்புவது விடுதலைக்கான ஒரு வழி.
  • புலன் இன்பங்களுக்குத் தீனி போட்டு நிறுத்திவிடலாம் என்பது, ஹோமத்தில் எரியும் அக்னியை அணைப்பதாக நினைத்து நெய் ஊற்றுவதுபோல் ஆகும் — அது மேலும் மேலும் வளருமே தவிர அணையாது.
  • புலன் இன்பங்களுக்கு ஏங்காமல், வெறுக்காமல், கிடைத்ததை ஈஸ்வர பிரசாதமாக அனுபவித்து, கிடைக்காததையும் ஈஸ்வர பிரசாதமாக நினைத்து வாழ்வாயாக.

கீழே தலைப்புவாரியாகப் பன்னிரண்டு அட்டைகளில் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அட்டையையும் தொட்டு/க்ளிக் செய்து விரிக்கவும்.

மகாவாக்கியங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கியங்களும்பகவத்கீதை, உபநிஷத் மகாவாக்கியங்கள், அத்வைத மகரந்தத்தின் மூன்று சத்தியங்கள்
  • ‘கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன’ — பகவத் கீதை. “செயல் செய்ய உனக்கு அதிகாரமுண்டு, அதன் பலனில் ஒரு சிறிதும் இல்லை.”
  • ஆத்மனஸ்து காமாய ஸர்வம் பிரியம் பவதி.
  • ‘ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்’ — இங்குள்ள யாவும் ஈஸ்வரனால் நிரப்பப்பட்டுள்ளன; தனது உடல்-மனம்-புலன் ஆகியனவும் அதில் அடங்கும். ஆத்மாவே எல்லாமாய் இருக்கிறது என்கிற ஈஸ்வர திருஷ்டியுடன் உலகை அணுகவேண்டும்.
  • யஸ்மின் சர்வாணி பூதானி ஆத்மைவாபூத் — எப்பொழுது எல்லா உயிரினங்களும் தானாகவே ஆனதோ.
  • ஸ ஏவ இதம் சர்வம் — அதுவே இவை அனைத்துமாக உள்ளது.
  • அஹம் ஏவ இதம் சர்வம் — நானே இவை அனைத்துமாக உள்ளது.
  • ஆத்ம ஏவ இதம் சர்வம் — ஆத்மாவே இவை அனைத்துமாக உள்ளது.
  • அஹிம்ஸா பரமோ தர்மா — அஹிம்சையே மேலான தர்மம்.
  • சஜாதிய-விஜாதிய-ஸ்வகத பேதம் ரஹிதம் (வேறுபாடு இல்லாதது) → ஏகம்.
  • பிரக்ஞானம் பிரம்மம் — ஐத்ரேய உபநிஷத் மகாவாக்யம்.
  • ஆத்மா வா இதம் — ஐத்ரேய உபநிஷத்.

அத்வைத மகரந்தம் வழி மூன்று உண்மைகள்:

  • அஹம் சதா பாமி → எப்பொழுதும் அறிந்தபடி உள்ளது. (பா → அறிதல், ஒளி, தன்னை அறிதல்; பாமி, பாதி, சுயம்பாதி. அபா → அறியாதிருத்தல், இருட்டு.)
  • அஹம் சதா அஸ்மி → எப்பொழுதும் இருந்தபடி உள்ளது.
  • அஹம் சதா ப்ரியம் → எப்பொழுதும் ஆனந்தமாக (ப்ரியமாக) உள்ளது. (ப்ரியமும் ஆனந்தமும் வேறு — ஆனந்தம் ஆத்மாவின் ஸ்வரூபம்; அது அந்தக்கரணத்தில் பிரதிபலிக்கும் பொழுது ப்ரியமாகிறது.)
ஆத்மா, மாயை, மித்தியா — அடிப்படைக் கருத்துகள்மாயா, அத்யாசம், மித்தியா, பிரம்மம், ஜீவன், அகங்காரம்

மாயா

  • யாமாசமாயா → இல்லாததை இருப்பது போல் காட்டுவது. த்ரிகுணங்களை (சத்வம்-ரஜஸ்-தமஸ்) கொண்டது.
  • (ஈஸ்வரனின்) காரண சரீரம் (ஜகத்) — அணைத்துப் பிரபஞ்சத்தின் அறிவின் சேமிப்புக் கலம் ப்ரகிருதி. சுத்த சைதன்யத்தின் உபாதி; உளதாய் இலதாய் இருப்பது (மித்தியா).
  • விவேக சூடாமணி: மாயா ஒரு பரமேஸ்வர சக்தி; இதை ஆராய்ந்து அறியமுடியாது. காரண நிலையில் வேறுபாடு காட்டாமல் இருக்கும்; வேறுபாடற்றதை அனுபவிக்கவோ அறியவோ முடியாது (வேறுபாடுகள்: ஜாதி, கிரியை, குணம்) — குணபேதங்களால் உண்டாகும் விகல்பங்களையே அறியமுடியும். ஒவ்வொரு புளியமரமும் ஒவ்வொரு வடிவில் இருக்கிறது; ஆனால் உடைத்து அரைத்துப் பார்த்தால் புளியங்கொட்டைகளுக்கிடையே எந்த வித்தியாசமும் தெரியாது — காரண ரூபத்தில் வேற்றுமைகளே கிடையாது.

அத்யாசம் / அத்யாரோபம் / அபவாதம் / விட்சேபம்

  • ஆவரணம் (மறைத்தல்) — விட்சேபம் (வேறொன்றாகக் காட்டுதல்). நான் அல்லாதவற்றை நானென்று பார்ப்பது — உடல்/மனம்/புத்தி எதுவுமே நான் இல்லை; அவற்றின் தர்மத்தை ஆத்மா மீது சுமத்திப் பார்ப்பதே அத்யாசம். இருப்பதை வேறொன்றாகப் பார்ப்பது (கயிற்றில் பாம்பு, சிப்பியில் வெள்ளி) — Super-imposed; இருப்பது ஈஸ்வரன் மட்டுமே, நாம-ரூபங்களைப் பார்ப்பது விட்சேபம்.
  • ஒரு பொருளின் மீது வேறான பொருளைத் தெரிந்தே ஏற்றிவைப்பது அத்யாரோபம் (வஸ்துனி அவஸ்து ஆரோபம்) — கட்டமைத்தல் (ஈஸ்வரன் இருக்கிறார், உலகம் இருக்கிறது…). தெரியாமல் ஏற்றி வைப்பது அத்யாசம். ஏற்றிவைத்த வேறு பொருளை நீக்குவது (அவஸ்து நிஷேதம்) அபவாதம் — கட்டுடைத்தல் (ஈஸ்வரன், உலகம் என இரண்டு இல்லை).
  • உதாரணம்: இருட்டறையில் கயிற்றைப் பாம்பாகப் பார்ப்பது அத்யாசம். சாஸ்திரம் இதைத் தெரிந்தே செய்யும்போது அது அத்யாரோபம். பயந்தவருக்கு முதலில் “பாம்பு இருக்கிறது” என்று அவர் போக்கிலேயே சொல்லி, பின்னர் “அது பொய்ப்பாம்பு; இருப்பது கயிறு மட்டும்” என விளக்குவதே அத்யாரோப-அபவாத நியாயம். சத்தியமான மண்ணின்மீது மித்தியாவான பானை எப்படி வைத்துப் பார்க்கப்படுகிறதோ, அப்படியே ஆத்மாவின்மீது பிரமாதா வைத்துப் பார்க்கப்படுகிறான். (இதே கொள்கை மூன்றுவகைச் சம்பந்தங்களில் — சம்யோகம், காரண-காரிய சம்பந்தம், தாதாத்மிய சம்பந்தம் — ஆத்மாவுக்குப் பொருந்தாது என்பதையும் காட்டும்; ஆத்மாவுக்கு அவயவம் இல்லாததால் சம்யோகம் சாத்தியமில்லை.)

மித்தியா

  • இச்சொல் உபநிஷத்தில் இல்லை; பின்வந்த ஆசார்யர்களால் சேர்க்கப்பட்டது. (ஐத்ரேய உபநிஷத் — சங்கரானந்தா). எந்த விஷயங்கள் அனுபவத்திற்கு மட்டும் இருந்து, விசாரிக்கும்போது உண்மையில்லை எனக் கண்டறியப்பட்டு நீக்கப்படுகிறதோ அது மித்தியா. மித்தியாவும் அத்யாசம்தான் (சுமத்திப் பார்க்கப்படுகிறது). எது மித்தியா எனச் சொல்ல: “அது கலைவையினால் (சேர்க்கையினால்) உண்டானதா?” எனக் கேட்கவேண்டும் — எதுவெல்லாம் காரியமோ, எது அநித்தியமோ, அது மித்தியா.
  • மித்தியா vs க்ஷணிகம்: புத்த மதம் ‘க்ஷணிகம்’ (தோன்றி மறைதல்) என்கிறது; வேதம் ‘மித்தியா’ என்கிறது. ஆத்மா தோன்றி மறைவதாகப் புத்தர் கூறினார் (ஆனால் அவர் கூறியது புத்தியைப் பற்றி). தோன்றி மறைவதையும் அறிவது ஆத்மா (அறிவு) — எனவே தோன்றி மறைவது அறிவற்றது; ‘இல்லை’ என்பதையும் அறிவது ஆத்மா.

ஆத்மா (ஐத்ரேய உபநிஷத் — சங்கரானந்தா, பக். 29)

  • ஆப்னோதி இதி ஆத்மா; ஆததே இதி ஆத்மா; அத்தி இதி ஆத்மா; அததி இதி ஆத்மா. உறுப்புகள் (சேர்க்கை, அவயவம்) இல்லாதது; ஆச்ரயம் (சார்பு) அற்றது — அடிப்படையானது, சார்பு இல்லாதது (துணிக்கு நூல் ஆத்மா போல்).
  • பரமாத்மா — இதற்குமேல் இதைப் பிரிக்கமுடியாது; அனைத்திற்கும் ஆத்மா. ஒன்றே உள்ளது — பரமாத்மா, ஜீவாத்மா என இரண்டு இல்லை.
  • ஜீவாத்மா — relative name; ‘ஜீவன்’ என்று சொல்வதே உச்சிதம்.

சதா — எப்பொழுதும் இருப்பது

  • நிகழ்காலம், எதிர்காலம், கடந்தகாலம் என காலத்தின் அதிஷ்டானமாக இருப்பது ‘சதா’. எப்பொழுதும் இருப்பது என்பதற்குக் கடந்த-எதிர்-நிகழ் என்பதே இல்லை; அல்லது நிகழ்காலம் மட்டுமே உண்டு. (அத்வைத மகரந்தம், பக். 43: சதா அஹமஸ்மி) எது சதா உள்ளதோ அது சத்தியம்.

அப்பியாசம் (யோக சூத்திரம் 1.14: தீர்க-கால-நைரந்தர்ய-ஸத்காராஸேவிதோ த்ருடபூமிஹி)

  • ஸ து = ஆனால் அது; தீர்க்க காலம் = நீண்ட காலத்திற்கு; நைரந்தர்யம் = இடைவெளியின்றித் தொடர்ச்சியாக; ஸத்காரம் = முழு மரியாதை/பக்தி/ஈடுபாட்டுடன்; ஆஸேவிதோ = கடைப்பிடிக்கப்படும்போது; த்ருடபூமிஹி = உறுதியான அடித்தளத்தை அடைகிறது (மனதில் நிலைத்து நிற்கிறது).

அதிஷ்டானம் — இருப்பைத் தருவது. ஆகாயம் பஞ்சபூதங்களுக்கு அதிஷ்டானமாக இருக்கிறது; சைதன்யம் அனைத்திற்கும் அதிஷ்டானமாக இருக்கிறது.

பிரம்மம் / கடவுள் லட்சணம்

  • காலம், இடம், பொருள் ஆகிய எதனாலும் வரம்பிடப்படாமல் (limitless) எல்லையின்றி இருக்கும் அத்வைத வஸ்துவுக்குப் பிரம்மம் என்று பெயர். கடவுள் என்றும் பெயர். நித்திய வஸ்து — எப்பொழுதும் (முக்காலமும்) மாறாது இருப்பது; படைக்கப்படாதது. (படைக்கப்பட்ட அனைத்தும் சேர்க்கையினால் உருவானது — உலகம், உடல், மனம், அறிவு அனைத்தும் சேர்க்கையினால் உருவானவை.)
  • அறியாமை இல்லாத அறிவு (தூய அறிவு / முற்றறிவு) — மனிதனின் ஒவ்வொரு ‘அறிவிலும்’ அறியாமை மறைந்தே இருக்கிறது; அணுவைப் பற்றிய அறிவில்கூட அறியாமை உண்டு. தனது புத்தியிலிருந்து கண்டுகொண்ட அறிவை வைத்து முடிந்ததைப் படைத்துக்கொள்கிறான் — ‘கற்றது கை அளவு.’
  • உபாதானக் காரணம் — பிரம்மமே அகிலத்தைப் படைப்பதற்குத் தேவையான பொருளாக இருக்கிறது; எதிலிருந்து எல்லாம் பிறக்கின்றனவோ, எதனால் அவை உயிர்பிழைத்திருந்து, மரணத்தில் எங்கு சென்று அடங்குகின்றனவோ அதுவே பிரம்மம். சிருஷ்டி (படைப்பு), ஸ்திதி (நிலைப்படுத்தி வைத்தல்), லயம் (ஒடுக்கம்) ஆகிய மூன்றுக்கும் காரணம் என்பதே இதன் பொருள். (ஈசாவாஸ்ய உபநிஷத்)
  • நிமித்த காரணம் — ‘சோ காமயத பஹுஷ்யாம் ப்ரஜாயேயேதி’ — “பிரம்மம் பலவாக ஆகி, தோற்றத்திற்கு வருவேன் என விரும்பியது” (தைத்திரீய உபநிஷத் 2.6) என்பதிலிருந்து, படைப்புக்கான நிமித்த காரணமும் பிரம்மமே எனத் தெரிகிறது. குயவன் பானைக்கு நிமித்த காரணமாக இருக்கிறான் — சிருஷ்டி செய்யும்வரைதான் அவன் தேவை; ஸ்திதிக்கும் லயத்திற்கும் அவன் காரணமல்ல. ஆனால் பிரம்மத்திற்குப் பிரிதாக வேறொரு காரணி இல்லை.

ஜீவன் — பிரம்மம் சர்வகாரணம் என்கிற விதத்தில் ஜகத்தின் காரணமாக உள்ளது; ஜகத் பிரம்மத்தின் காரியமாகும், காரியம் எப்போதும் மித்தியாவே. எனவே பிரம்மம் ஜீவன்களாகவும் பகுபடாதது; ஜீவர்கள் யாவும் பிரம்மத்தின் காரியங்கள் — மித்தியா.

விச்வம் – ஜகத் — விச்வம் என்பது ஐம்புலன்களாலும் அனுமானத்தினாலும் அறிந்ததும், அறியாததும், இருப்பதும், இனிவருவதும். ஜகத் என்பது ‘நான்’ தவிர்த்து இருக்கும் அனைத்தும் (சித்தம், புத்தி, மனம், உடல், உலகம்). இரண்டுமே ஜடம் (தன்னறிவற்றது, அசேதன வஸ்து, அபா ரூபம்).

உபநிஷத் (சொல் பிறப்பு) — உப: அருகே; நி: அழைத்துச் செல்லுதல். யாரை எங்கே? — இந்த ஜீவனைப் பிரம்மனிடத்தில். எதன் உதவியால்? — நான்-ஜகத் என்னும் இருமையைக் கலைவதன் மூலம். எதனால் உண்டான இருமை (துவைதம்)? — அறியாமையாலும், அதன் குட்டிகளாலும் (சம்சாரம், துக்கம்).

அகங்காரம் — அஹம்: நான், எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பது. காரம்: ‘க்ரு’ (செய்தல்). அஹம்-காரம் சேரும்போது ‘எனது’ என்று பந்தப்படுத்திக்கொள்கிறது — அறிவுடன் சேரும்போது நான் அறிபவன், உணர்விடம் சேரும்போது நான் உணர்பவன், செயலுடன் சேரும்போது நான் செய்பவன். ‘எனதில்லை’ என்பதே மோட்சம்.

ஏகம் — ஒன்று (அதைப்போல் இன்னொன்று இல்லை); அது மட்டும்தான் இருக்கிறது. சஜாதிய-விஜாதிய-ஸ்வகத பேதம் ரஹிதம் (இல்லாதது) → ஏகம். சஜாதியம் — intra-class variations; விஜாதியம் — inter-class variations; ஸ்வகதம் — variations within an entity.

அநாதி — நாதி (தன்னை ஆள்பவன்); அநாதி (எதனாலும் ஆளப்படாதவன்). பிரம்மம், ஜகத், ஜீவன், அவித்யா அனைத்தும் அநாதி (அனைத்தும் ஒன்றுதான்).

நிரவயவம் — அவயவங்கள் (உறுப்புகள்); நிரவயவம் → உறுப்புகள் அற்றது, சேர்க்கை அற்றது (ஆத்மா, பிரம்மம்).

நிரந்தரம் — அந்தரம் (இடைவெளி); நிர்-அந்தரம் (இடைவெளி இல்லாமல்).

உபாதி (Adventitious) — தன்னியல்பில்லாது, கலப்பினால் வரும் குணம் (வானத்திற்கு நிறமில்லை; நிறம் உபாதியால் வருவது). ஸ்படிகத்தில் சிவப்புநிறம் இருப்பதுபோல் தெரிவது — அது ஸ்படிகத்தின் பின்னால் உள்ள துணியின் நிறம்; அந்தத் துணி ‘உபாதி’.

பாஷ்ய ஹிருதயம் — சகல வேதத்தின் தாத்பர்யம்: பிரம்மம் இரண்டற்றது, அதுவே ஆத்மா.

வஸ்து / சத்தியம் — வஸ்து என்றால் மெய்யான பொருள். அஸ்தி-பாதி-பிரியம்: அஸ்தி என்றால் இருத்தல், பாதி என்றால் அறிதல் — ‘அது இருக்கிறது’ (அஸ்தி) என்று சொல்லும்போதே அது அறியப்பட்டுவிட்டது (பாதி); ஆத்மா சுயம்பாதி. சத்தியம் என்பது அந்த வஸ்து என்றும் இருப்பது — முன்னொருகாலத்தில் தோன்றி நீண்டகாலம் இருப்பதல்ல; தோன்றவே தோன்றாமல், யாராலும் தோற்றுவிக்கப்படாமல், துவக்கமே இல்லாமல் முக்காலத்திலும் இருந்துகொண்டிருப்பது.

அறிவும் உணர்வும்அறிவு-உணர்வு வேறுபாடு, அனுபவம் vs ஸ்வரூபம், பிரத்யபிஜ்ஞா

(இதன் விரிவான விளக்கம் — ஐத்ரேய உபநிஷத், சங்கரானந்தா, பக். 53: இந்திரியங்களும் தேவதைகளும்.)

  • அறிவு — பிரித்து அறிந்து பெயரிடுவது, ஏன், எப்படி என்று பகுத்தறிவது. (விலங்குகளுக்கு ‘அறிவு இல்லை’ என்பதன் பொருள் — அவை பிரித்தறியும், ஆனால் பெயரிடாது.) அறிந்ததெல்லாம் அறிவுகள்.
  • தூய அறிவு — அறிவுத்தன்மையுடன் இருப்பது. தூய உணர்வு — ஆனந்தம் (நிறைவு, தன் உணர்வு), உணர்வு மாத்திரம். தூய அறிவும் தூய உணர்வும் அந்தக்கரணத்தில் பிரதிபலித்து அறிவுகளும் உணர்வுகளுமாக வெளிப்படுகின்றன. உணர்வுக்குப் பெயரிட முடியாது; ‘-கள்’ என்பது வந்து போவதைக் குறிக்கும், ஸ்வரூபம் அல்ல.
  • அனுபவம் (குணம்) vs ஸ்வரூபம் — அனுபவம், குணம், உபாதி: தோன்றி மறைவது (ஜகத்யாம் ஜகத் — ஈசாவாஸ்யம்; ஜகத் என்றால் தோன்றி மறைவது). ஸ்வரூபம்: எப்பொழுதும் இருப்பது, நித்யம்.
  • தன்னறிவு — “நான் இப்படிப்பட்டவன்” என்கிற அபிப்பிராயம். விலங்குகளுக்கு இது இல்லை — ஆடு மாடுகள் ஆடை அணிந்துகொள்ளவோ மேக்கப் போட்டுக்கொள்ளவோ வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை; அவை எப்படி இருக்கின்றனவோ அப்படியே இருக்கின்றன. இன்னொன்றாக ஆக ஆசைப்படுவதற்கு ‘நான் இருக்கிறேன்’ என்கிற தன்னறிவு தேவை; அச்சிறப்புரிமை இல்லாததால் அவற்றிற்கு அந்த மன உந்தமும் இல்லை.
  • அனுபவம் என்பது பொய்யா? — அகமும் புறமும் ஒரே மெய்ப்பொருளாக இருக்கையில், அனுபவம் தரும் பேதம் உண்மையாய் இருக்கும். அனுபவத்தில் ஏற்படும் பேதத்தைப் பொய் என்று மறுக்கக் கூடாது; மாறாக அறிவின் மூலம் மறுக்கவேண்டும்.
  • பிரத்யபிஜ்ஞா / ஸ்மிருதி — முன்னொருகாலத்தில் எனக்கு என்ன நடந்தது என்பதை நினைவுகூர்ந்து பார்ப்பதற்குப் பெயர் பிரத்யபிஜ்ஞா. என்னைத் தவிர்த்து வேறு பொருள்களுக்கு என்ன நடந்தது என்கிற பழைய கதையை நினைத்துப் பார்ப்பதன் பெயர் ஸ்மிருதி. எனது சிறுவயதில் நிகழ்ந்தவை, சற்றுமுன் எனக்கு நிகழ்ந்தவை யாவும் பிரத்யபிஜ்ஞாவாகும்.
கற்பித்தலின் முறைபிரமாணம்-பிரகரணம்-பிரச்சாரம் — உண்மையை உணர்த்தும் மூன்று படிகள்
  1. பிரமாணம் (உபநிஷத், வேதங்கள்) — உண்மை சுருதி ரூபமாக, சூத்திர வடிவில் உள்ளது (E = mc² போல).
  2. பிரகரணம் (பிரக்ரியை) — அந்த உண்மையை விளக்கிக்கூறும் கற்பித்தல் முறை (பகவத் கீதை, மகாபாரதம், விவேகசூடாமணி, உள்ளங்கை நெல்லிக்கனி).
  3. பிரச்சாரம் — அந்தந்தக் கால உதாரணங்களை (contemporary examples) வைத்து அந்த உண்மையை விளக்குவது (பஞ்சதசி நூலில் உள்ளது போல்).
அறிதலின் வழிமுறைகள் — பிரமாணம்பிரமாணம், பிரத்யக்ஷம், அனுமானம், வியாப்தி — அறிதலின் தர்க்கம்

பிரமாணம்

  • அறிவைத் தரும் சாதனம் (கருவி/முறை): ப்ரத்யக்ஷம், அனுமானம், அர்த்தாபத்தி, உபமானம், அபாவம், சப்த பிரமாணம் — இந்த ஆறும் ஒன்றுக்கொன்று ஆர்த்தோகனல் (orthogonal).
  • எது பலம் வாய்ந்தது? எது பலப்பிரமாணமோ அது. (உதா: கானல் நீர் — ப்ரத்யக்ஷத்தில் இருக்கிறது, அனுமானம்/அர்த்தாபத்தியில் இல்லை; அனுமானமே சிறந்தது.)
  • வேதம் — வைதிக சப்த ஜனித ஞானம்; வேறு எந்தப் பிரமாணமும் தர இயலாத அறிவு.
  • ஒரு பிரமாணம் சரியா தவறா என்பதை இன்னொரு பிரமாணம் முடிவு செய்யாது.

ப்ரத்யக்ஷம் / பரோக்ஷம் / அபாதிதம்

  • பிரத்யக்ஷம் — நேரடியாகப் பெறும் அறிவு (direct/immediate knowledge, புலன்களால் பெறப்படுவது).
  • பரோக்ஷம் — மறைமுகமாகப் பெற்ற அறிவு.
  • அபாதிதம் — ஓர் அறிவுச்சாதனத்தின் மூலம் பெறக்கூடியது வேறு அறிவுச்சாதனங்களின் மூலம் பெறமுடியாததாக இருக்கவேண்டும்; அப்படியிருந்தால்தான் அதைப் பிரமாணம் எனச் சொல்லமுடியும்.

ஸ்ரத்தா — சாஸ்திர பிரமாண புத்தி (அஸ்திக்ய புத்தி). சிரவணம் (கேட்டல்) தான் சிரத்தையின் லட்சணம் — நம்பிக்கை இல்லாதவன் ஏன் கேட்க முற்படவேண்டும்? நம்பிக்கையுடன் கேட்க இசைவதே சிரத்தை.

நிச்சயார்த்தம் — வேதத்தில் கூறப்பட்டுள்ள சொல்லுக்கு இதுதான் சரியான பொருள் என்று (குருவின் மூலமாக, மீமாம்சம் செய்து) அர்த்தத்தை நிச்சயித்துக்கொள்ளுதல்.

மீமாம்சம் (analysis) — சொல்லிற்கு இதுதான் அர்த்தம் என விசாரித்து நிர்ணயிப்பது.

கரணம் (நூல்: Sadhguru) — அறிவுப்பகுதி; உள்ளிருந்து செயல்படுவதால் அந்தக்கரணம் எனப்படும் (மனிதனின் அந்தக்கரணம்: புத்தி). பிறக்கும்போது குழந்தையின் புத்தி அறியாமையில் மூடிக்கிடக்கிறது; வளர வளர காட்சிகள், ஸ்பரிசங்கள், வாசனைகள், சுவைகள், சப்தங்கள் ஆகிய புலன் விஷயங்கள் புத்தியில் அறிவாக மாறுகின்றன. இந்த மாற்றத்தின் பெயர் ‘விருத்தி’ அல்லது அந்தக்கரண விருத்தி. புலன்கள் (5) ‘விஷயீ’ எனவும், வெளியில் உள்ள உலகப் பொருள்கள் ‘விஷயம்’ எனவும் அழைக்கப்படுகின்றன.

பிரத்யக்ஷம் (Sadhguru) — நேரடியாகப் புலன்களால், எவ்வித முயற்சியுமின்றி அறியும் அறிதல்; நேரடி புலன்-அறிவு. கருவி-கரணங்கள் முறையாக இருந்தால் வெளியில் உள்ள விஷயம் உள்ளத்தில் அறிவாகிறது — கண்ணைத் திறந்தால் காட்சி கிடைப்பதுபோல், இது அநிச்சையான நிகழ்வு; இதில் ஒருவரது இச்சைக்கு இடமேயில்லை.

பிரமாணம் (Sadhguru) — அறிவு நிகழும் முறை. ‘எப்படி இதைத் தெரிந்துகொண்டீர்கள்?’ எனக் கேட்டால் ‘கேட்டு, பார்த்து, சுவைத்து, தொட்டு, முகர்ந்து தெரிந்துகொண்டேன்’ என்போம் — அந்த ‘அறியும் முறைக்கு’ப் பிரமாணம் எனப்பெயர். நேரடியாகப் புலன்களால் அறிவது பிரத்யக்ஷப் பிரமாணம். உலக விஷயங்கள் அனைத்தும் இதற்குள் அடங்குவதில்லை — கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரம், லேசர் ஒளி, உயிர்வேதியியல் நிகழ்வுகள் போன்றவை நேரடியாக அறியமுடியாதவை; இவற்றை அனுமானம், அர்த்தாபத்தி, உபமானம், அனுபலப்தி போன்ற வழிப்பிரமாணங்களால்தான் அறியமுடியும்.

வியாப்தி, அனுமானம் (Sadhguru) — நெருப்புக்கும் புகைக்குமிடையே உள்ள சம்பந்தத்தை ‘வியாப்தி’ என்பர். பலமுறை (frequentist) விறகு அடுப்பில் நெருப்புடன் புகை வெளிப்படுவதைப் பார்த்திருப்பதால் வியாப்தி அறிவு உண்டாகிறது — invariable concomitance. பள்ளிக்கூடக் கல்வியே வியாப்தி ஞானம்தான்; நிகழ்வுகளுக்கிடையேயான சம்பந்தங்களை அறிவதுதானே கல்வி. ‘யத்ர யத்ர தூமஹ, தத்ர தத்ர வஹ்நிமான்’ என்பது வியாப்தி ஞானம் — விஞ்ஞானமே முழுக்க முழுக்க வியாப்தி ஞானம்தான்; யாரும் நேரடியாகப் புரோட்டீன், அணு, துகள், கருந்துளை, பேரண்டத் துவக்கம் ஆகியவற்றைப் பார்க்காமலேயே அனுமானத்தின்பேரில் முடிவுகட்டுகிறோம். வியாப்தி ஞானம் மூலம் நேரடியாகத் தெரியாத விஷயத்தை அறியும் இடத்தைப் ‘பக்ஷம்’ என்பர்; பக்ஷ தர்மம், ஹேது இரண்டையும் பயன்படுத்தி வியாப்தி ஞானத்தால் ஒரு முடிவுக்கு வருவது அனுமானப் பிரமாணம்.

ஞானப்பலம் (Sadhguru) — புத்தியில் அறிவு நிகழ்வதற்கு நாம் எதுவும் செய்வதில்லை; அறிவு தெரிந்ததும் “ஆ, இது எத்தனை அழகிய தாமரை!” எனச் சொல்ல உள்ளத்தில் அகந்தை எழுகிறது. ஞானம் தானாய் நிகழ்கிறது — இதுவே ஞானப்பலம். ‘நான் அறிகிறேன், நான் தாமரையைப் பார்க்கிறேன்’ என்று அகந்தை ஞானப்பலத்தைச் சொந்தம் கொண்டாடுகிறது.

உவமானம், உவமேயம் (Sadhguru) — உவமானம் தெரிந்த பொருள்; உவமேயம் தெரியாத பொருள். ‘இது போன்றது அது’ என்று ஓர் உவமானத்தின் அடிப்படையில் ஒருவர் அறிவைப் பெறமுடியும் (உதா: முன் பார்த்திராத ‘ஆமா’ எனும் காட்டுப்பசுவை, “மாடு போன்றது, கொம்பு சிறியது, வயிறு வெள்ளையாக, முதுகு கருப்பாக…” என அறிமுகமான பசுவை வைத்துக் காட்டிக்கொடுக்கலாம்).

அனுபலப்தி (Sadhguru) — உபலப்தி என்றால் புலன் அறிவு (ஐம்புல அறிவு); அனுபலப்தி என்றால் இல்லாதிருப்பதை அறிவது — புலன்களுக்குத் தட்டுப்படாதது, ஆனால் இருக்கக்கூடியது.

ஞேய வஸ்து — இன்று இல்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் அறியக்கூடிய வஸ்து.

பரிச்சேதம் / பரிச்சின்னம் / அபரிச்சின்னம் — உணர்வால் வரம்பு கட்டுவது பரிச்சேதம். வரம்புக்குட்பட்ட உணர்வு பரிச்சின்னம். அபரிச்சின்னம் — வரம்பில்லாதது, பிளவுபடாதது.

அதிஷ்டான அறிவு

  அதிஷ்டானம் திருஷ்டம் / கல்பிதம் (அறியாமையால் தோன்றுவது)
உதாரணம் 1 கயிறு பாம்பு
உதாரணம் 2 பிரம்மம் பிரபஞ்சம்
அறியாமையும் (அவித்யா) அதன் விளைவுகளும்அவித்யா, மோஹம், பவம், சிற்றின்பம்-பேரின்பம்

அறியாமை (அவித்யா)

  • மாயையின் தமோ குணம் அறியாமையை உண்டாக்குகிறது. (விவேக சூடாமணி)
  • இரு வகை: 1) தூல அறியாமை — தனக்கு வெளியில் (முன்னிலை/படர்க்கை) இருக்கும் பல கோடி அறியாமை. 2) மூல அறியாமை — தன்னைப் பற்றிய (நான் என்பதின்) அறியாமை.
  • குணங்கள்: ஆவரணம் (உண்மையை மறைத்தல் — தமோ, மூலபந்தகாரணம்); விட்சேபம் (எது உண்மை என்று தெரியாததால் உண்மையைத் திரித்துக் காட்டுதல் — ரஜோ; திரித்துக் காட்டுவதால் ஆசை, கோபம், பொறாமை போன்ற உணர்வுகளைத் தூண்டி ஒருவனைச் செயல்படுத்துகிறது).
  • ஜடமும் அறியாமையும் வேறு — அவித்யாவை மூடத்தனம், ஜடம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அறிவித்தால் அறிந்துகொள்வது ‘அவித்யா’.
  • சர்வஜ்ஞன் — அனைத்தையும் அறிபவன். சர்வவித் — அனைத்தையும் அறியும் அறிவாக இருப்பவன்.

பிரதிபந்தம் — மூவகை இடையூறுகள்: ஆதிபௌதிகம், ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம். எது (எந்த எண்ணம்) உன்னைக் கட்டிப்போடுகிறதோ அது பிரதிபந்தம்.

மோஹம் / பவம்

  • மோஹம் — முக்கியத்துவம் தெரியாத (ஆசையால் விலையற்றவற்றிற்கு மதிப்பளிக்கும்) குழப்பத்திற்குப் பெயர்.
  • பவம் — தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்பன நான்கு மனித நாட்டங்கள். இவற்றுள் எது முக்கியம் எனத் தெரியாமல் மனிதர் குழம்புகிறார்கள். அர்த்தம்-காமம் இரண்டையுமே பெரிதும் மக்கள் நாடுவதால் இத்தேடல் முடிவிலாததாகிறது — பல கோடிப் பிறவிகளாக நாடியும் தேடியும் அர்த்த-காமத் தேடல் முடிவடைந்ததாகத் தெரியவில்லை. மாற்றம் வேண்டும், முன்னேற்றம் வேண்டும் என்று எண்ணிச் செத்துப் பிழைக்கும் சம்சாரித்துவத்தின் பெயர் பவம். ஞானிகளைத் தவிர அனைத்து உயிரினங்களும் இடைவிடாமல் ‘அடுத்து என்ன’ என்று எண்ணிக்கொண்டே இருக்கின்றன — பவம் ஒரு மனநோய்.

சிற்றின்பம் / பேரின்பம்

  • சிற்றின்பம் — விஷய ஆனந்தம்; விஷயங்கள் மூலம் வரும் இன்பம், நிரந்தர ஆனந்தமல்ல. விஷயம்: புலன்களிலிருந்து பெறுவது (கண்ணின் விஷயம் வண்ணங்களும் ரூபங்களும், நாக்கின் விஷயம் ருசித்தல்). எல்லாப் புலன்களும் எல்லையுடையவை — காலத்தாலும் இடத்தாலும் வரம்புக்கட்டவை; வஸ்துவால் பரிச்சின்னமானது.
  • பேரின்பம் — தடையற்றது; ‘இது இல்லை, அது இல்லை, இதை அனுபவித்ததில்லை’ என்பதின்றித் திருப்தியுடன் இருப்பது; புலன்களால் பெறுவதல்ல (விஷய சுகமல்ல).
சுதந்திரமும் கர்மமும்கர்மம், நிஷ்கர்மம், சுதந்திரத்தின் எல்லைகள்

சுதந்திரம்

  • மனிதனுக்கு மட்டுமே செயல் (கர்மம்) செய்யச் சுதந்திரம் உண்டு (செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம், மாற்றியும் செய்யலாம்) — ஐந்து கர்மேந்திரியங்கள்: வாக்கு, கை, கால், மல-ஜலம், இனப்பெருக்கம்.
  • அறிவை (புலன் ஞானத்தை) மாற்றி அறியச் சுதந்திரம் இல்லை — ஐந்து ஞானேந்திரியங்கள்: பார்த்தல், கேட்டல், தொடுஉணர்தல் (ஸ்பரிசம்), சுவைத்தல் (ருசி), நுகர்தல் (கந்தம்). சக்கரையைக் கசப்பாக சுவைக்க முடியாது; சிவப்பைக் கருப்பாகப் பார்க்க முடியாது; வலியை இன்பமாக உணரமுடியாது. பிரமாணங்களிடம் நாம் (விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) நூற்றுக்கு நூறு சரணடைந்துதான் இருக்கிறோம். உள்ளதை உள்ளவாறு அறிவதே ஞானம் (அகர்மம்).
  • சுதந்திரம் உள்ளவன் சுயகட்டுப்பாட்டுடன் இருப்பவன்.

கர்மம் — கர்மம் என்றால் செயல்; ஆனால் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். இயந்திரத்தனமான செயல் கர்மம் ஆகாது (மின்விசிறி சுற்றுவது, நடப்பது, பல் துலக்குவது). திட்டமிட்டுச் செய்வது கர்மம் — அதில் தர்மம்-அதர்மம் சீர்தூக்கிப் பார்க்கப்படுகிறது.

நிஷ்கர்மம் / காம்ய கர்மம்

  • காம்ய கர்மம் — (தன்) விருப்பு-வெறுப்பினால் (ராக-த்வேஷத்தால்) ஒரு காரியத்தைச் செய்வது/செய்யாமல் இருப்பது; இது பாவ-புண்ணியத்தைச் சார்ந்தது.
  • நிஷ்கர்மம் — விருப்பு-வெறுப்பின்றிக் காரியத்தைச் செய்வது (பகவானுக்காக) — இதுவே கர்மயோகம்.

ஸ்வதர்மம் — என்னுடைய கடமை. ஆதித்யதர்மம் — சூரியனின் கடமை. நித்திய கர்மா — அன்றாடம் செய்யவேண்டியவை.

சராசரம் — சரம் — இயங்குவது (சக்கரத்தில் சுழலும் பாகங்கள், உலகம், மனதின் எண்ணங்கள்). அசரம் — இயங்காமல் இருப்பது (சக்கரத்தின் அச்சு, சாட்சி, அசங்கம், அசலம்). இயங்குவதற்குள் இயங்காமல் இருப்பது — அண்ட சராசரம்.

சாதனை வழிமுறைகள்ஸாதன சதுஷ்டயம், சிரவணம்-மனனம்-நிதித்யாசனம், ஸ்தைர்யம்

உள்ளத்தூய்மை

  • மனத்தூய்மை, சித்தசுத்திக்காகச் செய்வது கர்மயோகம் — உடம்பால் (காயத்தால்) செய்வது; செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவனுக்காகச் செய்தல்; மனம் சஞ்சலப்படாமல் இருப்பதே நோக்கம். அனைத்து மனச் சஞ்சலங்களும் (ஆசை, கோபம், பொறாமை) செயல்களில் வைக்கும் விருப்பு-வெறுப்பினால் தோன்றுபவை.
  • மன ஒருமைப்பாடு, சித்த நைச்சல்யத்திற்காகச் செய்வது உபாசனை (தியானம்) — மனதால் செய்வது; மனதை நிகழ்காலத்தில் வைத்திருப்பது; கடந்தகால-எதிர்கால சிந்தனைகள் இன்றி இருப்பது; இதைக் குறிப்பிட்ட காலம் தினமும் செய்யவேண்டும். தியானத்தில் வேறெந்தச் சிந்தனையும் வைக்கக் கூடாது; தேவைப்பட்டால் அதற்கெனத் தனி நேரம் ஒதுக்கிக்கொள்ளலாம். மனதை நிலைநிறுத்துவதே உபாசனையின் நோக்கம்.
  • இவை இரண்டும் கிடைத்த ஒருவனுக்கு ‘வேதத்தின் ஞானம்’ உள்ளபடி புரியும்.

பஜகோவிந்தம்

ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் நிர்மோஹத்வே நிச்சலதத்வம் நிச்சலதத்வே ஜீவன்முக்தி: (9)

குருபரானந்தம்

  • அனைத்திலும் சமமாக, அளவுடன் அனுபவித்தல்; அதீதத்திற்குச் செல்லாமல் இருத்தல்.
  • ஒருவருக்கு ‘அறிவு’ வந்தபின் (15 வயதிற்குமேல்), தான் செய்யும் செயல்களுக்குத் தானே பொறுப்பு; மற்றவர் யாரும் பொறுப்பாகமுடியாது.
  • துவைத விவேகம் (பஞ்சதசி, அத்தியாயம் 11): இருப்பது ஈஸ்வரசிருஷ்டி மட்டுமே; ஜீவன் அதன்மீது சிருஷ்டி செய்கிறான் — இது எனது, எனது அல்ல, பிடிக்கும், பிடிக்காது…

ஸாதன சதுஷ்டயம் (நூல்: அபரோக்ஷானுபூதி)

அவரவர் வர்ணம், ஆச்ரமம் ஆகியவற்றிற்கு உகந்த ஈஸ்வர அர்ப்பணிப்பு, தபஸ் முதலியவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவருக்கு வைராக்யம் முதலிய நான்கு விதமான சாதனங்களும் உண்டாகும். (ஆச்ரமம் என்பது பள்ளிப்பருவம், இல்லறம், ஓய்வு வாழ்க்கை, சந்நியாசம் எனப்படும் துறவு வாழ்க்கை.)

  1. வைராக்யம் — காகத்தின் எச்சத்தை எவ்வித வைராக்யத்துடன் துடைக்கிறோமோ, அவ்வித வைராக்யத்தைப் பிரம்மலோகம் முதல் இவ்வுலகம் வரையிலான அனைத்து விஷய சுகங்களிலும் கொள்வதே சுத்தமான, முழுமையான விவேகபூர்வமான வைராக்யம். ஒரு பொருள் தரும் சுகத்தின்மீதான வேண்டுதல்-வேண்டாமை இரண்டும் இல்லாதிருத்தல் — இது பற்றின்மை.
  2. விவேகம் — நித்திய, அநித்திய விஷயங்கள் எவை எவை என்பதைக் கண்டுபிடிக்கும் அறிவே விவேகம்; புத்தியில் கலந்துவிட்டவற்றைப் பிரித்துவைக்கும் காரியம் — உண்மையையும் பொய்யையும் அறிவாலேயே பிரிப்பது. ஆனால் வைராக்யமில்லாத விவேகத்தால் எந்தப் பயனும் இல்லை.
  3. சமம் — வேண்டாத அதர்மமான (சாஸ்திரம் மறுக்கின்ற) எண்ணங்கள் எழுந்தால், அவற்றின் விருப்பப்படி ஓடவிடாமல், அவை வேண்டத்தகாதவை என்று அறிந்ததும் நிறுத்திவிடவேண்டும்; அதற்கு நேர் எதிரான எண்ணங்களை அனுமதிக்கவேண்டும். இவற்றை வராமல் தடுக்கமுடியாது, ஆனால் வருவதை அறியாமல் போவதில்லை.
  4. தமம் — புலன் அடக்கம், இந்திரியக் கட்டுப்பாடு. மனம் செய்யத் தவறிய சமத்தைத் தமத்தால் சரிசெய்துகொள்ளவேண்டும். காமம்-குரோதம் முதலிய எண்ணங்களில் மனம் இறங்கிவிட்டாலும், அதைச் செயல்படுத்த கண் முதலான ஐந்து புலன்களையும், கை-பேச்சு முதலான கர்ம இந்திரியங்களையும்தான் பயன்படுத்தவேண்டும் — ஆகவே பாஹ்ய இந்திரியங்களை எண்ணத்தின் இஷ்டப்படி செயல்படாதபடி நிறுத்தவேண்டும்.
  5. உபரமம் — ‘விலகிக்கொள்ளுதல்’; வைதிகமான, லௌகிகமான காரியங்களில் புதிதாகப் பொறுப்பேற்றுக்கொள்வதைத் தவிர்த்தல்.
  6. திதிக்ஷா — எதை நம்மால் மாற்றமுடியுமோ, மாற்றினால் துன்பம் நீங்குமோ, அதைச் செய்யலாம்; முயன்றும் நீங்கவில்லையெனில் சகித்துக்கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும்.
  7. சிரத்தை — முழு வேதம், குரு, அவரது உபதேசம் ஆகியவற்றில் முழு நம்பிக்கையுடன் பக்தி வைப்பது.
  8. சமாதானம் — அழிவற்ற பிரம்ம தத்துவத்தில் குறிக்கோளை வைத்து, எடுத்துக்கொண்ட லக்ஷியத்தில் மனத்தைக் குவித்தல்.
  9. முமுக்ஷுத்வம் — சம்சாரம் எனும் கட்டுத்தளையிலிருந்து விடுதலை எப்படி, எப்போது கைகூடும் என்கிற திடமான புத்தி.

சிரவணம் / மனனம் / நிதித்யாசனம்

  • சிரவணம் — குரு முகமாகச் சாஸ்திரத் தாத்பர்யத்தை (மையக்கருத்தை) ஐயம் நீங்கும்வரை தெரிந்துகொள்வது; காதால் கேட்டு அறியப்படுவதால் ஞானம் ‘சிரவணம்’ எனப்படுகிறது.
  • மனனம் — தன்னகத்தே எழும் ஐயங்கள், பிறரால் எழுப்பப்பட்ட சந்தேகங்கள், மற்ற சாஸ்திரங்களிலிருந்து உண்டாகும் மாற்றுக் கருத்துகள் ஆகியவை ஏன் தவறு எனச் சிந்தித்து, தன் ஞானத்தில் திரிபு நீக்கிப் புரிந்துகொள்வது.
  • நிதித்யாசனம் — இவ்விதம் பெற்றுக்கொண்ட ஆத்மஞானத்திலேயே மனத்தைப் பழக்கவேண்டும்; ஞானத்திற்குமுன் வாழ்ந்த வாழ்க்கைச் சுவடுகள் நீங்கும்வரை நிதித்யாசனம் எனும் ஞானயோகாப்பியாசம், தியானம் செய்யவேண்டும் (யோகாரூடத்துவம்) — இப்படித்தான் ஒருவன் தன்னை ஜீவத்துவத்திலிருந்து உயர்த்திக்கொள்ளவேண்டும் (ஆத்மனா உத்தரேத்).
  • மனத்தூய்மை பெற்றபின்தான் ஞானம் கிடைக்குமா? — இல்லை. ஆனால் மனத்தூய்மை அடைவதற்குமுன் ஞானம் பெற்றவர்களால் அதன் பலனுக்கேற்ப வாழமுடிவதில்லை. கேள்விப்பட்ட பிரம்மஞானம் வேறு, விளங்கிக்கொண்ட பிரம்மஞானம் வேறு — விளங்கிக்கொண்ட (அவகதப் பிரம்மம்) ஞானமே முக்தி; விளங்காத ஞானம் வெறும் ஸ்ருதப் பிரம்மம்.
  • புத்தியின் வளர்ச்சி விவேகம்; மனத்தின் வளர்ச்சி வைராக்யம். புத்தியின் அனுமதியின்றி மனம் தன் இஷ்டத்திற்குச் சுற்றித் திரியக்கூடாது. ஞானியின் மனம் பிறர் பேசக்கேட்கும்போது சலனமற்றப் பாறையாக இருக்கும்; பிறரிடம் பேசும்போது மலர்போல மாறிவிடும் — இதுவே சமமான மனது. மெய்ப்பொருள் உண்மையை விளங்கிக்கொண்ட பிறகு மற்ற சாஸ்திரங்களைப் படிப்பதும் வீணே.

ஸ்தைர்யம் — மன உறுதி என்பது நிஷ்டை, திடசித்தம், ஸ்தைர்யம் ஆகும் (தமிழில் ‘தைரியம்’ என்று பேசப்பழகிவிட்டோம்). கடமையில் ஒருவர் கொள்ளும் உறுதியே தைரியம் — கர்மநிஷ்டை, ஸ்வதர்மநிஷ்டை என்றும் குறிப்பிடலாம். குறிக்கோளை அடையும்வரை அதிலேயே விடாப்பிடியாக இருத்தல் தைரியம் — சோம்பல் பாராமல், காரணம் கற்பிக்காமல், அடித்த ஆணி போல் இலக்கை அடைவதில் உறுதியாக இருக்கவேண்டும். பகவான் கிருஷ்ணன் தன் மதிப்பீடுகளை வரிசைப்படுத்திப் பேசுகையில் தைரியத்தை நிஷ்டையாகவே குறிப்பிடுகிறார் — ஆத்ம அறிவைப் பெறுவதில் ஒருவர் காட்டும் உறுதியான நிலைப்பாட்டையே ஸ்தைரியம் என்கிறார். (சுருதிபாரம் — புரிந்துகொள்ளும் சக்தி.)

சாது — நல்லதை நாடி வாழ்பவன் (இன்பத்தை அல்ல); தனக்கும் நல்லது, பிறருக்கும் நல்லது. கோபம் இல்லாதவன் என்று பொருள் அல்ல. சத்கர்மம் செய்பவன்.

ஒழுக்கம் — எது நன்மையை (இன்பத்தை மட்டுமல்ல) தருகிறதோ அவை ஒழுக்க விழுமியங்கள்; அந்த நன்மை மூலம் இன்பம் பிறந்தால் அது ஏற்புடையது. இன்பம் மட்டும் தரும் செயல்கள் ‘இழுக்கம்’ ஆகும். தர்மமான செயல்கள் ஒழுக்கச் செயல்கள் (படிப்பது, இன்சொல் கூறல்). நிஷ்டா, ஒழுகுதல், கடைப்பிடித்தல் (value system, self-discipline) — ஒரு discipline அல்ல.

சரணாகதி — சரணம்: அடைக்கலம். கதி: வழி. சரணாகதி பலவீனத்தின் அடையாளம் அல்ல — கண்ணிடம் சரணடைந்தால்தான் காட்சி உண்டாகும் (கண்ணே, நீ சிவப்புநிறத்தை மாற்றி எனக்கு மஞ்சள் நிறத்தில் காட்டு என்று சொல்ல உனக்கு உரிமை இல்லை). யாரிடம் சரணடைகிறோமோ, அவரின் பலம் நமக்கு வந்துவிடும். பலனில் சரணாகதி, செயலில் அல்ல.

மோட்சம் என்றால் என்ன? — எப்படி இருக்கிறாயோ அப்படியே இருந்து மனத்தில் முழுமை அனுபவிப்பதே முக்தி; முழுமையைத் தேடி அலையும் மனம்தான் சம்சாரம். ஏராளமான நிலம், மாடு, மனை, தங்கம், நவரத்தின மணிகள் போன்ற செல்வத்தால் மனநிறைவு என்கிற மோக்ஷம் கிடைக்குமா? (செல்வம் சேர்ப்பது தவறா? — உண்மையில் செல்வம் ஞானத்திற்குத் தடையில்லை; ஆனால் ஞானத்தை வாங்கித் தராது.)

தத்வம் (அத்வைத வரையறை) — மெய்ப்பொருள் என்ன என்று தேடுவது; அழியாதது, உற்பத்தி-நாசம் இல்லாதது, எப்பொழுதும் இருப்பது, சத்தியம். அனைத்துத் தத்துவங்களும் எதைப்பற்றிப் பேசுகிறது? பந்தத்திலிருந்து எப்படி மோட்சம் அடைவது, அதற்கான சாதனம் என்ன? (பந்தம், மோட்சம், சாதனம்) இறந்தபின் ஜீவன் என்னவாகிறான்? இந்த ஜகத் எப்படி உருவானது? இதைப் படைத்த இறைவன் எப்படிப்பட்டவர்? (ஜீவன், ஜகத், ஈஸ்வரன்)

  • பந்தம் (limit) — முதல் பந்தம்: உடம்பு/சரீரம் (தொழில்நுட்பம் இதை உடைக்க முயல்கிறது — பறத்தல், தொலைநோக்கி/நுண்ணோக்கி மூலம் கண்ணின் வரம்பை உடைத்தல்). பிராணன்: எனர்ஜி (வெறும் காற்றல்ல). மனசு: எப்பொழுதும் சௌகரியத்தை மட்டுமே தேடும், விரும்பும். அறிவு (புத்தி): “எனக்குத் தெரியாது” என்பதே. நான்/எனது: என் மொழி, என் ஜாதி, என் தலைவன், என் கடவுள்… எதையெல்லாம் ‘நான்’ என்கிறோமோ, அது நம்மை எல்லைக்கு உட்படுத்துகிறது.
  • மோட்சம் — “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல், அதனின் அதனின் இலன்.” நீ இந்த உடல் என்று நினைத்தால் இந்த உடலுக்கு வரும் துன்பம் உனக்குத்தான்; மனம் என்று நினைத்தால் மனதுக்கு வரும் துன்பம் உனக்குத்தான்; அறிவு என்று நினைத்தால் அறிவினால் வரும் துன்பம் உனக்குத்தான்.

நானே பொய் — ஆகவே என் இன்பமும் துன்பமும் பொய். நம்முள் இரண்டு ‘நான்’கள் உள்ளன — ஒன்று சாட்சி (அசங்கம், மாறாதது); இன்னொன்று தோன்றி மறைவது (அகங்காரம்). தூக்கத்தில் வேறு நானாகவும், நனவில் வேறு நானாகவும், கனவில் வேறு நானாகவும் தோன்றி மறையும் தன்மையுடன் இருக்கும் இந்த அகங்காரம் உண்மையில்லை. இந்த விவேகத்துடன் எப்பொழுதும் இரு.

பொதுவான சொற்களின் அத்வைத/சரியான அர்த்தம்50+ அன்றாடச் சொற்களுக்கான வேதாந்த அர்த்தம் — முழுச் சொற்களஞ்சியம்

ஆன்மிகம் — தன்னைப் பண்படுத்தும் கலை.

அஹிம்சை — யாருக்கும் (தன்னையும் சேர்த்து) துன்பம் அளிக்காமல் இருப்பது — வாக்கினாலும், செயலினாலும், எண்ணத்தினாலும். மனத்தால் பிறர் துன்பத்தை விரும்புவதும், சபிப்பதும் ஹிம்சையே. மகா விரதம் — எங்கு துயரத்தைத் தவிர்க்க முடியுமோ, அங்கு மற்றவர்களுக்குத் துயரம் கொடுக்காமல் இருப்பதே அஹிம்சை; மற்றவர்கள் நன்மைக்காக, அவர்கள் திருந்தும் பொருட்டு கஷ்டம் கொடுப்பது ஹிம்சை ஆகாது. பொறாமைப்படுதல், வெறுப்பு வளர்த்தல், கோபம் கொள்ளுதல், பழிவாங்கும் உணர்வு — இவற்றில் நம் சொற்களைக் கவனமாகக் கையாளவேண்டும். பலன்: அஹிம்சையால் மனம் லேசாகிறது; நுண்ணிய உண்மைகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் வருகிறது. மன்னிப்பது பலவீனம் அல்ல — மன்னிப்பதற்குத்தான் மனோபலம் அதிகம் தேவை. உண்மையை மென்மையாகக் கூறு; ஒரு சில உண்மைகளை ஜீரணிக்கும் சக்தி ஒருவரிடம் இல்லையெனில், அந்த உண்மையை மறைப்பதும் அஹிம்சையே.

வ்ருத்தி (பதஞ்சலி யோகசூத்திரம்) — பரிணாமம் அடைவது, மாறுவது; மனதைப் பொறுத்தவரை எண்ணத்திற்கு ஏற்ற உணர்வு மாற்றம். இடைவிடாமல் மாறிக்கொண்டே இருப்பது மனம் (எண்ணங்கள்) — தூங்கும்போதுகூட “நான் ஏதும் அறியவில்லை” என்கிற வ்ருத்தி இருந்துகொண்டே இருக்கிறது. சத் (அறிவு) வ்ருத்தி, ரஜஸ் (உணர்வு) வ்ருத்தி, தமோ (இருத்தல்) வ்ருத்தி என மூன்றாகப் பிரிக்கலாம் — சத் வ்ருத்தியை வளர்க்கவேண்டும். நிரோதம் — நெறிப்படுத்துதல்.

யோகா — chapter என்ற பொருளும், சேர்த்தல் என்ற பொருளும் உண்டு.

காமம் — புலன் இன்பத்தில் இச்சை.

சூட்சுமம் — புலப்படாதது (புலன்களுக்குப் படாதது).

ஜடம் (Insentience) — கனமான என்று மட்டும் பொருள் அல்ல. எதற்குத் ‘தன்னிச்சை’ இல்லையோ அது ஜடம் — தானாக இயங்காது, இயக்கத்தை நிறுத்தாது; நிலையை மாற்ற ஒரு புறத்தூண்டுதல் வேண்டும். எனவே புலன், மனம், புத்தி, சித்தம் (அனைத்தும் கூடிய அந்தக்கரணம்) ஜடம்தான். அறிவு குறைவானதும் ஜடம்தான் (இறைவன் பூர்ண அறிவு) — பாரதியார் இருட்டு என்பதைவிடக் குறைவான ஒளி என்று சொல்கிறார்.

நிஜம் — பொது அர்த்தம்: உண்மை, சத்தியம். சரியான அர்த்தம்: என்னுடையது. “நிஜம் அல்ல” என்றால்: என்னுடையது அல்ல. ஆகாரம் — ரூபம்.

பொய்த்தோற்றம் (illusion) — இருப்பதைத் தவறாகப் பார்ப்பது. மாயத்தோற்றம் (hallucination) — இல்லாததை இருப்பதாகப் பார்ப்பது.

வைதிக வாழ்க்கை — வேதத்தைப் பின்பற்றி அன்றாடம் வாழ்வது. நித்திய கர்மா / நிமித்த கர்மா. அஷ்டமி, நவமி, ஏகாதசி — வைதிகக் கர்மங்களில் இருந்து ‘விடுமுறை’ அளிப்பது; அந்த நாட்கள் ‘கெட்ட நாட்கள்’ என்று பொருள் கொள்ளக்கூடாது. சந்தியா வந்தனம் — சந்திக்கும் நேரத்தில் (காலை, மதியம், இரவு) செய்வது.

ஓஜோஸ் — ஞானத்தால் அறிவது (மூன்றாம் கண், பௌதிகமானதல்ல).

லோகா — புலன்களும் புலன் விஷயங்களும் சேர்ந்த தொகுதி; புலனனுபவக் களம். லோகங்கள் பல வகைகளில் உள்ளன — பூ, புவ, ஸுவ… என்று சாஸ்திரம் வேறுபடுத்திக் கூறுகிறது. அசுரர்கள் — அசு என்றால் பிராணன், புலனின்பங்களிலேயே திளைத்திருப்பவர்கள். தேவர்கள் — நியதிகளை அல்லது இந்திரியங்களைக் குறிப்பது.

ஆபாசம் — untrue, இல்லாதது (நடிகர்கள் கோபப்படுவது போல, உண்மையில் இல்லை; போட்டோ, சிலை வடிவம் — பிரதிபிம்பம்).

சூத்ர வாக்கியம் — கருத்தை மிக மிகச் சுருக்கமாகக் கூறும் வாக்கியம். வ்ருத்தி வாக்கியம் — சூத்திர வாக்கியத்திற்குச் சுருக்கமான விளக்கம். வியாக்யானம் — மிக விளக்கமான உரை.

கேவலம் — அது மட்டும். கேவல ஞானம் (ஞானம் மாத்திரம்).

பொய் — தீர விசாரிக்கவில்லை என்றால் ‘இருப்பது’; விசாரித்தால் ‘இல்லாமல்’ போவது — ‘உளதாய்’ (விசாரிக்கும் முன்), ‘இலதாய்’ (விசாரித்தபின்) இருப்பது. மெய்நிகர் — உண்மை போல், போலி; சமஸ்கிருதத்தில் ‘இவ’; பிரதிபிம்பம், ஆபாசம்.

பகவான் (கைவல்ய உபநிஷத், பக். 31) — (பக-) ஆறு சக்திகள் உடையவர்: 1. ஸ்ரீ — படைத்தல் (இடம், பொருள், காலம்). 2. ஐஸ்வர்யம் — அனைத்தையும் கட்டி ஆளுதல். 3. ஞானம் — முற்றறிவு. 4. சமக்ர வீர்யம் — செய்து முடிக்கும் வல்லமை. 5. வைராக்யம் — விராகம். 6. யசஸ் — அனைத்து வியத்தகு நிகழ்வுகளும், ஜீவர்களின் திறமைகளும் மகிமைகளும் அவரது மகிமையே; எல்லாப் புகழும் இறைவனுக்கே.

தேசம் — இடம் (கால-தேசம்); ‘நாடு’ என்ற பொருள் கொள்ளக்கூடாது.

ஆண்மை — மனிதர் வசிக்கும் பூமியில்தான் ஜீவன்முக்தர்கள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்; இங்குதான் குரு இருப்பார். தேவர்களில் சிலர் ‘மனிதனாகப் பூமியில் பிறந்திருக்கலாமே!’ என்று யோசிப்பதும் உண்டு. அப்படி ஓர் அரிய வாய்ப்பு மனிதப்பிறப்பு; அதிலும் அரிய வாய்ப்பு மனநோய் இல்லாத ஆளுமையுடைய பிறப்பு. இதை ‘ஆண்மை’ அல்லது ‘பும்ஸம்’ என்று சங்கரர் கூறுகிறார் (விவேக சூடாமணி). “ஆண்மை தவறேல்” — பாரதியார்.

ஆனந்தம் — அனந்தம் (குறைவற்றது, எப்பொழுதும் இருப்பது). மகிழ்ச்சி, சந்தோஷம் போன்றவை ‘குறைவற்றவன்’ என்கிற நிலை நிறைவாகும்போது வருவது (பின் போய்விடுவது — அது அனந்தம் இல்லை).

ஜாதி — group: ஆண், பெண், மலர், சினிமா… எண்ணற்றவை. சஜாதி — ஒரு ஜாதிக்குள் இருக்கும் வகைகள் (intra-class varieties). மனம் (அறியாமையால்) தெரிந்த ஜாதிக்குள் இருக்கும் அனைத்து வகைகளையும் அனுபவிக்கவேண்டும் என்கிறது.

கதி — வழி. அகதி — வழியற்றவர்கள். அதோகதி — கீழான வழி (கீழுலகம்). உத்தர கதி — மேலான வழி (மூன்று மேல் லோகங்கள்). லோகம் — அனுபவிக்கும் இடம், அனுபவங்கள்.

அல்பம் — அளவுடையது, சிறியது. பூமா — அளவில்லாதது. விசித்திரம் (விபு) — விதவிதமான, பலவான. சன்னதி — அருகாமையில். ஆலயம் — இருக்கும் இடம் (உதா. ஹிமாலயா — பனி இருக்குமிடம்). மகாபூதம் — சூட்சுமமான பூதங்கள்; ஸ்தூலமானது → ‘பௌதிகம்’.

ஏஷனத்ரயம் (ஈசாவாஸ்யம்) — ஏஷனம்: ஆசைகள். த்ரயம்: மூவகையான (தமிழ் நூல்கள் மண், பெண், பொன் என்றும், சாஸ்திரம் புத்திரேஷணம், வித்தேஷணம், லோகேஷணம் என்றும் கூறும்). புத்திரேஷணம் — தாம்பத்யம், குழந்தை, உறவுகள் மீதான ஆசைகள். வித்தேஷணம் — செல்வம், பொன், பொருள் மீதான ஆசைகள். லோகேஷணம் — வீடு, நிலம், சொர்க்கலோகம் மீதான ஆசைகள்.

ஆகமம் — இதை அடைவதற்கு இவ்வாறு செய்வது. பிரம்மச்சாரம் — பிரம்மத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்பவன், பிரம்மத்தைப் படிப்பவன்/அறிபவன் — கல்யாணம் செய்யாதவன் என்று பொருளல்ல.

பூ / பூதம் — தோன்றுதல் (சம்பூ — நன்றாகத் தோன்றுதல்; பூமி, பூதம் — ஐம்பூதம், சூட்சுமத்திலிருந்து தோன்றியது). அபூ — மறைதல் (நபூவம் — நான் மறைந்துவிடக் கூடாது). பவ்யம் — தோன்ற இருப்பது.

சேதனம் — அறிவுடையது. அசேதனம் — அறிவற்றது.

நிஷ்டை / ஞானநிஷ்டா — நிஷ்டை: அர்ப்பணிப்புடைய வாழ்க்கை; பிரம்மஞானத்திற்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ‘பிரம்மநிஷ்டர்’. ஞானநிஷ்டா — சதா கதனம் (ஞானத்தைப் பற்றிப் பேசுதல்), சதா சிந்தனம், சதா சத்சங்கம். எதுவரை? ஞானம் உறுதியாகும்வரை, சுபாவமாகும்வரை — கடைசி மூச்சுவரை.

சந்நியாசம் — (கோர) உணர்வுகளை வென்றவன் (ஒடுக்கியவனோ வெறுத்தவனோ அல்ல). கோர உணர்வுகள்: கோபம், பொறாமை, ஏமாற்றம், பயம்.

மூன்று வகையான சம்பந்தங்கள் — சம்யோகம் (கத்தி உறைக்குள் பொருந்துவதுபோல், உறுப்புகளுடன் கூடிய இரு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்திக்கொள்வது; ஆத்மாவுக்கு அவயவம் இல்லாததால் சாத்தியமில்லை); காரண-காரிய சம்பந்தம் (களிமண் → பானை); தாதாத்மிய சம்பந்தம் (இரும்புக்குண்டு அக்னியுடன் சேரும்போது இரும்புக்கு ஒளியும், ஒளிக்கு எடையும் கிடைத்ததுபோல் தோன்றுவது).

சமர்த்து (தக்ஷக) — அறிவும் செயலும் சேர்ந்திருப்பது.

பிரியம் பிரேமா பிரமோதம் — பிரியம் — ஆசைப்படும் பொருள் (கார் கண்முன் இருத்தல்). பிரேமா — ஆசைப்படும் பொருளை அடைதல் (கார் வாங்குதல்). பிரமோதம் — அதை அனுபவித்தல் (கார் ஓட்டுதல்).

சம்- (முன்னொட்டு) — 1. சம்ஹிதம்: சேர்க்கப்பட்டது (பிரம்மத்தைத் தவிர அனைத்தும் சேர்க்கப்பட்டது). 2. சம்யோகம். 3. சம்சயம்: சந்தேகம். 4. சம்சாரம். 5. சம்ஸ்காரம்: பழக்கதோஷம் (உடல்தான் நான், தேக அபிமானம் போன்றவை); பழைய மனப்போக்கு, பழக்கம், நினைவுகள். 6. சம்யக்.

மும்மூர்த்தி வகைப்பாடுகள்தாபத்ரயம், அவஸ்தாத்ரயம், குணத்ரயம், சதுஷ்டயம்
  • தாபத்ரயம் — ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம்.
  • அவஸ்தாத்ரயம் — ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), நித்ரா (உறக்கம்).
  • குணத்ரயம் — சத்வம், ரஜோ, தமோ.
  • ஏஷனத்ரயம் — புத்திரேஷணம், வித்தேஷணம், லோகேஷணம் (மேலே விரிவாகக் கண்டோம்).
  • சரீரத்ரயம் / அவஸ்தைகளின் தேவதைகள் — விஷ்வன், தைஜசன், பிராஜ்ஞன் (ஜீவனின் பக்கம்); விராட், ஹிரண்யகர்பன், ஈஸ்வரன் (ஈஸ்வரனின் பக்கம்); அந்தர்யாமி.
  • பிரஸ்தான த்ரயம் — மூன்று அடிப்படை ஆதார நூல்கள்: உபநிடதங்கள் (ஸ்ருதி பிரஸ்தானம்), பகவத் கீதை (ஸ்ம்ருதி பிரஸ்தானம்), பிரம்மசூத்திரம் (ந்யாய பிரஸ்தானம்).
  • சதுஷ்டயம் — பிரமாதா (அறிபவன்), பிரமேயம் (அறியப்படும் பொருள்), பிரமா (அறிவு) + வேறுபடுத்தும் நான்கு காரணிகள்: ஜாதி, குணம், கிரியை, சம்பந்தம்.
  • ஷட் விகாரங்கள் — பிறப்பு, இருப்பு, வளர்ச்சி, மாற்றம், தேய்வு, சாவு.
  • புருஷஸூக்தம் — ஸூக்தம்: நன்றாக சொல்லப்பட்டது. புருஷன்: ஆத்மா.
எனது புரிதல்கள்தனிப்பட்ட பிரதிபலிப்புகள் — கர்மா, அகங்காரம், மோட்சம்
  • தவறான அறிவு தவறான உணர்வைத் தரும் (பத்தாமவன் கதை). நமது தலையாய நோக்கமே ‘அறிவில் மாற்றம்’ கொண்டுவருவதுதான். ஈஸ்வரன், ஜகத், ஜீவன் அனைத்துமே பிரம்மம்தான் — அது நீதான் (நான் என்று உன்னுள் சாட்சியாக இருப்பது). இந்த அறிவு மாற்றம் உனது individuality-யை அழிக்கிறது — நீதான் எல்லாம் என்றால், வேண்டும்-வேண்டாம் என்று பேச என்ன இருக்கிறது.
  • சாந்த உணர்வுகள்தான் உனது இயல்பான உணர்வு; கோர உணர்வுகள் உன் செயல்காலால் (கர்மாவால்) உருவாகுபவை. உணர்வுகளே செயலைத் தூண்டுகின்றன.
  • பிரம்மம் = ஆத்மா = பரமாத்மா = சைதன்யம் = சுயம்பாதி? மாயை = மித்யா = பிரமேயம் = அத்யாசம்? ஜகத் = ஸர்வம்? (நான் தவிர்த்து அனைத்தும் உள்ளடக்கியது — மனம், உடல், இவ்வுலகம், ஈரேழு உலகங்கள்). பிரமாதா = அகந்தை = விஷயீ = த்ருக்?
  • பிரமாதா அல்லது அகந்தை என அனைத்துமே ஜடம் — எவை எல்லாம் உன்னால் அறியப்படுகிறதோ அவை எல்லாம் ஜடம். அகந்தை (நான் எங்கிற உணர்வு)கூட ஜடம்தான் — விழித்திருக்கும்போது வருகிறது, உறக்கத்தில் ஒடுங்கிவிடுகிறது; வயது மாற மாற அகந்தையும் மாறிக்கொண்டே இருக்கிறது.
  • சைதன்யம் (சாட்சி) மட்டுமே சத்தியம், அறிவானது. அதன் அறிவாலே அகந்தைக்கும் இந்த உலகப் பொருள்களுக்குமிடையே ஒரு ‘அத்யாசம் (சம்பந்தம்)’ உருவாகிறது. சைதன்யம் → அகந்தை → புத்தி → மனம் → புலன் → உலகம் (சைதன்யத்தில் இருப்பது).
  • உற்றுக் கவனித்தால் பிரமாதா, பிரமேயம் (அறிவது, அறியப்படுவது) இரண்டுமே மித்தியா என்பது தெரியும். எது மித்தியா என்று சொல்ல, “அது கலைவையினால் (சேர்க்கையினால்) உண்டானதா?” எனக் கேட்கவேண்டும். எது காரியமோ அது மித்தியா.
  • அகங்காரம் — அஹம்: நான், எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பது. காரம்: க்ரு, செய்தல். அஹம்-காரம் சேரும்போது ‘எனது’ என்று பந்தப்படுத்திக்கொள்கிறது — அறிவுடன் சேரும்போது நான் அறிபவன், உணர்விடம் சேரும்போது நான் உணர்பவன், செயலுடன் சேரும்போது நான் செய்பவன். ‘எனது’ என்பதை விட்டுவிடுவதே மோட்சம். எது எனது? — புத்தி, மனம், உடம்பு, புலன், உலகம் அனைத்துமே; இவை உன்னைக் கட்டி வைக்கின்றன (limit you, draw a boundary) — இவை அழிந்தால் நீ அழிவதாகச் சொல்கிறாய்.
  • (தவறான) தன்மானம் (கவுரவம்) — தவறான தன்மானம் (அபிமானம்) மாபெரும் பலவீனம். சரீரத்தில் (நான் கருப்பு, குட்டை, அழகில்லை…), மனதில் (நல்லவன், கெட்டவன், சோம்பேறி…), அறிவில் (அறிவாளி…) தன்மானம். நல்லவனாக இருப்பது தப்பில்லை; பேரெடுக்க ஆசைப்படுவதுதான் தவறு. (‘மானம்’ என்றால் மதிப்பீடு.)
  • கர்மாவை விடுதல் என்றால் என்ன? — எதையும் செய்யாமல் இருப்பது என்று பொருளல்ல; சும்மா இருத்தல் என்றும் பொருளல்ல. ‘நான் செய்கிறேன்’ என்கிற கர்த்தாவை விடுவதுதான். அனைத்தையும் செய் — உனது மனது செய்கிறது, உனது உடல் செய்கிறது, உனது புத்தி செய்கிறது; சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் வந்து ‘செய்கிறேன்’ ஆகிறது. அவ்வளவுதான்.
  • பிரம்மஞானி எல்லோரிடமும் அன்பாகவும், ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவும் இவ்வுலகில் இருக்கமுடியுமா? — பிரம்ம அறிவு, பிரம்ம உணர்வைத் தரும் (திருப்தி); அது அனைவருக்கும் சமம். ஆனால் இவ்வுலகில் இருக்கும் எல்லோரும் பிரம்மஞானிகள் அல்ல — தத்தமது அறிவால் ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள். ஆகவே, எதை எவரிடம் பேசவேண்டும், மறைக்கவேண்டும் என்று அவர் அறிவார்; அது தவறல்ல.
  • எண்ணத்தைக் கட்டுப்படுத்தல் என்றால் என்ன? — எண்ணங்கள் வராமல் தடுப்பது அல்ல! எண்ணங்கள் வாசனை காரணமாக வந்தே தீரும். அந்த எண்ணங்களைச் செயலாக மாற்றாமல், சாட்சி பாவமாக இருந்து கடந்துவிடவேண்டும் — அவை மாறிவிடும்; அவற்றைத் தண்டிக்காமல், தடுக்காமல் இருந்தால் போதும். அதர்ம எண்ணங்களை மட்டும் வளரவிடாமல் நிறுத்தவேண்டும்.
  • பாவம்-புண்ணியம் உருவாகும் இடங்கள்: மனம் → வாக்கு → காயம். அதர்ம எண்ணங்கள் முதலில் மனதில் எழுகின்றன (உபாசனை: இங்குதான் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்); பின்பு வாக்கிலே வெளிப்படுகின்றன (பிறரையும் வாக்கால் காயப்படுத்துகின்றன); கடைசியாக உடலிலே செயலாக வெளிப்படுகிறது.

உடலை நான் இல்லை என்று மறுப்பது ஏன் சிரமமாக இருக்கிறது?

  • உடல் என்னுடன் மிகவும் நெருக்கமாகப் பல ஜன்மங்களாக இருந்துவருவதால், அத்தனை சுலபமாக ‘உடலை எனதல்ல’ என ஒதுக்கித்தள்ளுவது இயலாததாக இருக்கிறது.
  • சக்கரை வியாதிக்காரர் ஒருவரின் கால் நோய் முற்றியதால் வெட்டி நீக்கப்படுகிறது. வெட்டிய அவரது காலைத் துணியில் சுற்றி, “இது உங்களுடையது; நீங்கள்தான் இது!” என்று திருப்பிக் கொடுத்தால், அவர் அதிர்ச்சியில் தன் காலைத் தொடக்கூட மாட்டார். ஒரு மணிநேரத்திற்குமுன், கால்வலியைத் தன் வலியாக நினைத்தவர், இப்போது ‘அது நானல்ல’ என்று துண்டிக்கப்பட்ட காலை வெறுத்து ஒதுக்குகிறார் — ஆச்சரியம்! (நூல்: அத்வைத மகரந்தம்)
  • அகங்காரம் ஆழ்ந்து தூங்கிப்போகும்போது சம்சாரத் துயரங்கள் மறைந்துபோகின்றன. இதிலிருந்தே தெரிகிறது — அகங்காரத்தினுடையதுதான் சம்சாரம், சாட்சியினுடையது அல்ல என்பது.
திருக்குறள் ஒப்புமைவேதாந்தமும் திருக்குறளும் சந்திக்குமிடம்
  • சிரவணம், மனனம், நிதித்யாசனம் = “கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.”
  • நித்திய, அநித்திய விவேகம் = “நிலையில் நிலையல்லது உணரும் புல்லறிவு” — நிலை இல்லாதவற்றை நிலை என்றுணரும் புல்லறிவு.

குறிப்பு நூல்களும் காணொலிகளும்

இக்குறிப்புகளில் மேற்கோள் காட்டப்பட்ட நூல்கள்: ஐத்ரேய உபநிஷத் (உரை: சங்கரானந்தா), அத்வைத மகரந்தம், விவேக சூடாமணி (ஆதிசங்கரர்), யோக சூத்திரம் (பதஞ்சலி), பஞ்சதசி, பகவத் கீதை, ஈசாவாஸ்ய உபநிஷத், தைத்திரீய உபநிஷத், கைவல்ய உபநிஷத், அபரோக்ஷானுபூதி, பஜகோவிந்தம், திருக்குறள், பாரதியார் பாடல்கள், மற்றும் Sadhguru-வின் நூல் ஒன்று.

பல்வேறு சத்சங்க காணொலிகளும் இக்குறிப்புகளுக்கு ஆதாரமாக இருந்தன — 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12.


நான் இந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்துவேன். குருவின் அருள் என்றும் துணைநிற்க.

ॐ शान्तिः शान्तिः शान्तिः