கணிப்போம் வா

 

"கண்ணா, வெளியில விளையாடப் போறயா, குடை எடுத்துட்டு போப்பா, மழை வர 60% வாய்ப்பிருக்குனு (Chance) போட்ருக்குப்பா ", என்றாள் திண்ணையில் ஸ்மார்ட் போனை ஸ்க்ரால் செய்தபடி அமர்ந்திருந்த பாட்டி. "அட போ பாட்டி, வெயில் கொளுத்துது" என்று அவள் சொன்னதை அசட்டை செய்து விட்டு சென்றான் பேரன் ஹரி .

இவர்களது பேச்சை கேட்டவாறே வீட்டினுள் சென்றாள் பேத்தி மீனா .

" ஆறு விக்கெட் போய்டுச்சு, 59 ரன் வேணும் ஆனா 3 ஓவர்தான் இருக்கு, இலங்கை ஜெயிக்க வாய்ப்பே இல்லை", என்று யாரோ ஒருவர் அந்த மேட்ச்சை பார்த்துகொண்டிருந்த அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.. "அப்படி உறுதியா சொல்ல முடியாது, இலங்கை ஜெயிக்கவும் வாய்ப்பு இருக்கு ", என்று மறுத்தார் அப்பா.

அப்பாவுடன் சேர்ந்து தானும் அந்த கிரிக்கெட் மேட்ச்சை பார்க்க ஆரம்பித்தாள் மீனா...அப்பொழுது, அந்த TVயின் சின்னத் திரையில் பெரிய இடத்தை அடைத்துக்கொண்டு WIN-Predictor எனும் கணினி அமைப்பு ஆஸ்திரேலியா ஜெயிக்க 98 சதவீதமும், இலங்கை ஜெயிக்க வெறும் 2 சதவீதமே இருப்பதாக காண்பித்ததுக்கொண்டிருந்தது ..

அப்பா, ஒரு சந்தேகம் "பாட்டி இன்னைக்கு மழை பெய்ய 60% வாய்ப்பு இருக்குனு Weather app சொல்லறதா அண்ணன் கிட்ட சொன்னாங்க, இப்போ இந்த Win-Predictor இந்த மேட்சில ஜெயிக்க ஆஸ்திரேலியாவுக்கு 98%, இலங்கைக்கு 2% வாய்ப்பு இருக்குதுனு சொல்லுது, இத எல்லாம் எப்படி கணிக்கிறாங்க (Predict)" என்று கேட்டாள்.. இதை எப்படி மீனாவிற்கு புரியும் படி எளிமையாக விளக்குவது என்று யோசிக்கத் தொடங்கும் போதே "ஏங்க, இந்தமாசம் வாங்குன பாலுக்கு பால்காரர்க்கு காசு குடுக்கணும், கரண்ட் பில் கட்டணும், மறந்திடாதிங்கனு" சொல்லி விட்டு நகர்ந்தாள் அம்மா..

மீனா, நம்ம வீட்டுக்கு அடுத்த மாசம் பால் பில் எவ்வளவு வரும்னு உன்னால கணிக்க (predict) முடியுமா? என்று இதை உதாரணமாய் வைத்தே உரையாடலை தொடர்ந்தார் அப்பா.. தாராளமாப்பா, ஒரு நாளைக்கு நாம ஒரு லிட்டர் வாங்குறோம். ஒரு லிட்டர் பால் 60 ரூபாய். ஜூலை மாசத்துல 31 நாள் இருக்கு. ஆக, 31 x 60, 1860 ரூபாய் ஆகும்பா.. குட், அப்படியே ஜூலை மாசத்துல நமக்கு எவ்வளவு கரண்ட் பில் வரும்னு கணிக்க முடியுமா?..ஒரு யூனிட்க்கு 5 ரூபாய் னு வச்சுக்குவோம்..

ம்ம்..."இத கணிக்கிறது கொஞ்சம் கஷ்டமாத்தான் தெரியுது.." என்றாள் மீனா..

ஏன்? என்று கேட்டார் அப்பா..

ஏன்னா, பால் ஒரு நாளைக்கு நம்ம ஒரு லிட்டர் தான் வாங்குவோம், அது மாறாதது (constant), அதனால கணிக்கறது சுலபமா இருந்துச்சு. ஆனா, நம்ம வீட்டுல lights, AC , TV ,fan ன்னு கிட்டத்தட்ட 28 மின்சாதன பொருட்கள் இருக்கு. ஒவ்வொரு சாதனத்திற்கும் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு யுனிட் மின்சாரம் எடுத்துக்கும்னு தெரியும். ஆனால், ஒரு மாதத்தில் ஒவ்வொரும் சாதனத்தையும் இவ்வளவு மணி நேரம்தான் பயன் படுத்துவோம்னு அறுதியிட்டு (certainity) சொல்ல முடியாது..அது தொடர்ச்சியா மாறிட்டே (variable) இருக்கும்..பாருங்க இப்பகூட அண்ணன் ரூம்ல எல்லா லைட்டும் fanனும் தேவையில்லாம ஓடிட்டுதான் இருக்கு...அதனால இவ்வளவுதான் கரண்ட் பில் வரும்னு உறுதியா சொல்ல முடியாது.. சரியாய் சொன்னாய், அதாவது அந்த 28 மின்சாதனப் பொருட்கள் தான் நம்முடைய கரண்ட் பில்லை தீர்மானிக்கும் 28 காரணிகளாக(factors or features) இருக்கின்றன. அந்த 28 காரணிகளின் பங்கு(weightage) ஒவ்வொரு மாசமும் ஒவ்வொரு மாதிரி (random) மாறும் (variable). ஒருவேளை, நான் கடந்த 5 வருஷத்தில் ஜூலை மாசத்துல வந்த கரண்ட் பில்லை குடுத்தால் அது உனக்கு உதுவுமா? நிச்சயமாப்பா!.எப்படின்னா, எந்த வருசமா இருந்தாலும், மே மாசம் நம்ம கரண்ட் பில் அதிகமா இருக்கும், காரணம் நாம AC யை அதிகமாக அந்த மாசத்துலதான் பயன்படுத்துவோம். அப்படினா போன வருஷம் மே மாசம் வந்த கரண்ட் பில்லும், இந்த வருஷம் மே மாசம் வந்த கரண்ட் பில்லும் ஏறத்தாழ ஒன்றாகத்தான் இருக்கணும்... இந்த மாதிரி ஒவ்வொரு மாதத்திற்கும் அந்த 28 காரணிகளும் இணைந்து ஒரு வகையான usage Pattern ஐ உருவாக்கியிருக்கும்..அது நமக்கு உதவலாம்..

கற்பூரம் மீனா நீ!. அதாவது, கடந்த கால கரண்ட் பில்கள் அத்தனையும் உனக்கு தரவுகளாக (Data) இருக்கு. அந்த தரவுகளில் மறைந்துள்ள(Hidden) patterns ஐ பயன்படுத்தி நம்மால் ஓரளவேனும் (aprroximately) சரியாக கணிக்க முடியும். ஆனால், அந்த கணிப்பு எல்லா நேரமும் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.. இவ்வாறு விளக்கிக் கொண்டிருக்கும்போதே போதே tv யில் இருந்து வரும் ஆரவார சப்தம் இவர்களது கவனத்தை ஈர்த்தது ..ஆச்சர்யம்.."இலங்கை வெல்ல 2% மட்டுமே வாய்பிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் இலங்கை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வென்றிருந்தது"... "பார்த்தாயா கடந்த கால தரவுகளை (data) வைத்து Win-Predictor செய்திருந்த கணிப்பு(prediction) பொய்த்துவிட்டது", என்றார் அப்பா..

"கணினியின் கணிப்பு மட்டுமா தவறானது, இலங்கை வெல்ல வாய்ப்பே இல்லை (0%) என்று உங்களிடம் சொன்ன அந்த மனிதனின் கணிப்பும் தான்!," என்றாள் மீனா.

புரியதுப்பா, ஒரு விளைவுக்கான காரணிகள்(factors/features) ஒன்றுடன் ஒன்று சிக்கலான (complex) முறையில் பிணைக்கப் (related) பட்டிருந்தால், கடைசி நிமிடத்தில் கூட விளைவு எப்படி வேணாலும் மாறும். அதாவது, இப்போ 60% தான் மழைக்கு வாய்ப்பு என்றாலும், அம்மா இப்பொழுது சுடும் தோசைக்கல்லில் இருந்து வரும் ஆவி கூட அதை 100% மாக மாற்றிவிடும் ஒரு காரணிதான் இல்லையா.. சொல்லி முடிக்கவில்லை..

ஜோ என்று மழை...சிறிது நேரம் கழித்து நனைந்து கொண்டே வந்தான் ஹரி..அடுத்து என்ன பவர் கட் ஆகா 100% வாய்ப்பு இருக்கா என்று பாட்டியிடம் நக்கலாக கேட்டுவிட்டு வீட்டினுள் சென்றான்... சிரித்துக் கொண்டே ஸ்மார்ட் போனை ஸ்க்ரால் செய்து கொண்டிருந்தாள் பாட்டி..

Note: The article was published in a popular weekly tamil magazine by Dinamalar.